Tuesday, February 25, 2014

”சுயநல பிழை..?”

எனக்கென்ன எதுஎது எக்கேடு கெட்டாலும்
தனக்கென்ன தன்வரையில் எல்லாம் சரியாயிருக்க
உனக்கென்ன வந்தது இப்படி உரைக்கிறாய்..?
உனக்கான போராட்டம் உனக்கானது - அதில்

எனக்கேதும் பங்கில்லை ஏனென்றால் நீயும்
நானும் நாமில்லை - பிறகென்ன கேள்வி
பிரிந்து நின்றே நம் வேள்வி
பிளவுற்றே பிரிவுற்றோம் பிரதேச பிரதிநிதிகளாய்

வந்தவன் ஆளட்டும் - இங்கு வாழ்ந்தவன்
மாளட்டும் மண்ணில் தஞ்சம் பிழைக்க
வந்தவன் ஆளட்டும் - தரிசு திருத்தி
தரணி ஆண்டவன் தொலையட்டும் - நமக்கென்ன..?

வெட்கமா...? மானமா...? இரண்டும் கெட்டான்
பெற்ற பிள்ளைகள் நாங்கள் - பிறவியால்
மண்ணில் விளைந்த தொல்லைகள் நாங்கள்
ஒருபிடி சோற்றுக்கும் ஒருகுவளை நீருக்கும்

பஞ்சம் பிழைக்கும் அடிவயிற்றுக் கோழைகள்
எங்கள் தேசத்துத் திண்ணை தூங்கிகள்
அயலான் வீட்டு வெண்ணை நக்கிகள்
நாங்கள் உயர்ந்த மானுடத்தின் அடிமைகள்

எங்களை “தமிழன்” என்கிறது உலகம்.
எங்களை “திராவிடன்” என்கிறோம் நாங்கள்
எங்களில் எங்களை பிரித்து ஆளும்
எங்களுக்கான தலைமைகளின் சதியாட்டம்.

1 comment:

'பரிவை' சே.குமார் said...

பஞ்சம் பிழைக்கும் அடிவயிற்றுக் கோழைகள்
எங்கள் தேசத்துத் திண்ணை தூங்கிகள்
அயலான் வீட்டு வெண்ணை நக்கிகள்
நாங்கள் உயர்ந்த மானுடத்தின் அடிமைகள்...

உண்மைதான் இதுதான் தற்போது திராவிடனாய்... தமிழனாய் இருக்கும் நமது நிலை...

செம்மறி ஆட்டுக் கூட்டமாய் தலைவனின் சதியில் பயணிக்கும் பாவ பிராணிகள்...