Saturday, February 15, 2014

சுடும் சுகம்...!

கிண்ணத்தில் எடுத்த முதம்தனை ஊட்ட
கன்னத்தில் வாங்கி கடையிதழ் சிந்தி
குழைத்து குழைத்து வழித்து திணிக்கும்
குழைந்த அமுதம் தாங்கும் குமுதம்

இளைத்து மெலியா திருக்க காட்டும்
நகைத்து நடித்து சுவையை ஊட்டும்
குழலென நெளித்து குவளைவாய் இசைக்கும்
மழலையின் யாழென குரலின் மயக்கம்

தவழல் தழுவல் இரண்டும் கலந்தே
தானே நடக்கும் உணர்வின் கலத்தல்
மானே..! மயிலே..! ஊணே...! உயிரே...!
தேனே..! தென்னவ செல்வமே..! அன்னமே..!

அஞ்சிக் கொஞ்சி ஆசையில் மிஞ்சி
இலவம் பஞ்சாய் இருகை ஏந்தும்
அழகின் ஊற்றில் அருந்தவ தேற்றல்
கலைய கஞ்சியில் காணும் சுகமாய்

இருந்த சுகம் இழந்த சுகம்
ஈடுசெய் பேறாய் ஈன்ற சேயாம்
இருதலை கொள்ளிக்கும் இருதலை கொல்லிக்கும்
இருத்தலை சொல்லியே இயம்புதல் வாழ்வாம்.

No comments: