Monday, December 09, 2013

உயிர்த்தேடல்...!


இரவுக் கொடியின் ஒளிப் பூக்களில்
இதயம் எழுதுகிறேன் என்னுயிரே - விழிகளின்
மொழிகள் சிந்தும் சந்தம் விழுகிறதா..?
மனதில் புதைகிறதா நினைவில் உறைகிறதா...?

கன்னிக் கொடியின் கனவுப் பூக்கள்
பின்னி முடித்த பண்ணின் பாக்கள்
எண்ணி கிடக்கும் என்னில் விண்மீனாய்...!
மென்னி விழுங்கி இடறுகிறேன் இரவை...

உருகும் பாகாய் உணர்வுக் குவியல்
பருகும் வாகாய் இரவின் பசியில்
பெருகும் தழலாய் ஊணின் மசியல்
கருகும் விறகாய் உயிரின் விடியல்...!

வெட்ட வெளிநோக்கி வெற்றுப் பார்வை
விடியலை நோக்குவதாய் வினோதம் காட்டி...!
பொட்டல் வெளியாய் மனம் புழுதிபரப்பி
கொட்டும் இரவை கட்டி அணைத்து

எனை மீட்டி வதைக்குமுன் நினைவுகள்
ஆழியின் அலைகள் ஆடும் என்னுள்
தாழிடா மனதில் தடுமாற்றம் உள்ளுள்
மோழியின் பிளத்தலாய் மொழியின் கிளர்தல்

அடைபடுமோ என்னில் உடைபடுமோ உன்னில்
வதைபடுமோ வசந்தம் சிதைபடுமோ..?! - உறவில்
நிலைபடுமோ வாடல் கலைபடுமோ - தேடல்
தடைபடுமோ ஊடல் சிறைபடுமோ..?! 

நடுங்கும் குளிரில் நடுங்கும் இரவில்
ஒடுங்கும் மனம் அடங்கும் உயிர்
ததும்பும் உணர்வால் தழைக்குமோ...?! - நாளை
ஒழுகும் பொழுதில் உயிர்க்கீற்று உறையுமோ..?

மெய்சிலிர்த்து மெய்சிலிர்த்து மெய்யுரை மெய்யில்
மையுறை கோலால் மனம் எழுதும்
தையலின் தாகம் பொழியும் பூம்பனியாய்
வைகறை வாசலில் அடிவான் நிரம்பும்

கண்ணுறைக் கனவே..! பெண்ணுறை பிணியே...!
மண்ணுறை விதையே...! மனமுறை கவியே..!
உடனுறை உன்னதம் தருவாய் - புவியில்
உடலினில் உயிராய் உறவு.

8 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு நண்பா...

மகேந்திரன் said...

அசத்தலான கவிதை நண்பரே....
ஆழ்ந்து படித்தேன்...
மோழி என்றால் மௌனம் என பொருள்படும் என்று
நினைக்கிறேன். என் பொருள் சரிதானா?

Thoduvanam said...

கண்ணுறைக் கனவே..! பெண்ணுறை பிணியே...!
மண்ணுறை விதையே...! மனமுறை கவியே..!
உடனுறை உன்னதம் தருவாய் - புவியில்
உடலினில் உயிராய் உறவு..
அருமை ..அருமை ..பிள்ளை.. தமிழ் ..
உங்கள் கவிதைக்கு நான் என்றும் காதலன் ..

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

தமிழ்க்காதலன் said...

அன்பு தோழன் சே.குமார் வாங்க, உங்களின் ஆதங்கம் தீர்க்கும் பொருட்டு மீண்டும் எமது வலைப்பூவில் வசிக்கத் தொடங்கி இருக்கிறேன். மகிழ்வீர்கள் என நம்புகிறேன்.

தமிழ்க்காதலன் said...

அசத்தலான கருத்தை பதியமிட்ட தோழர் மகேந்திரன் வாங்க, உங்களின் கருத்து எழுத்துக்கு ஒரு உற்சாகம் தருகிறது.

நன்றி.

தமிழ்க்காதலன் said...

எமது பெருமதிப்புக்குரிய ஐயா காளிதாசு முருகையா அவர்களுக்கு வணக்கம், வாங்க.., தொடர்ந்து எமது படைப்பில் அமிழ்ந்து ஆழும் தங்களின் அடர்வாசிப்பில் நெஞ்சம் நெகிழ்கிறேன்.

தொடர்ந்திருங்கள் தொடர்பில்...

தமிழ்க்காதலன் said...

வாங்க தோழர் தனபாலன், தங்களின் இரசனையில் ஆழ்கிறேன். நல்ல இரசனைக்கும் வாசிப்புக்கும் நன்றி தோழரே.