Thursday, December 19, 2013

இருளின் உறவு...!


ஊடறுத்து பாயும் ஒளியில் நிலவின்
ஊடல் தீருமோ..?! இருளின் அடர்வில்
பனியின் பொழிவில் கலைந்த முகிலென
நனைந்த ஒளியின் பனித்த கண்கள்

நிலம் காணுமோ..?! அன்றி நிறம் மாறுமோ..?!
காயும் மேனியில் காதலன் விரலென
பாயும் புனலாய் படர்ந்து படரும்
மோகவிரக தாகம் தணிந்த மேகத்திரள்கள்

முத்துமுத்தாக கொத்துகொத்தாக திரட்சியாய் திரண்டு
சொட்டுசொட்டாக ஒழுகும் அழகில் - வழியும்
இலைகளின் வெட்கம் ஈரம் சுமந்தபடி..!
நடுக்கீறல் வழியே நடக்க சுகங்களின்

சொர்க்க வாசல் திறக்கும் இலைமகள் இதழ்களில்
பாற்கடல் திவலைகள் பள்ளிகொள் அழகில்
பூக்கடல் அலைகளில் பல்லுயிர் பயணம்
பாக்கடல் அலைகளில் கவிஞனின் அயனம்

கவினுறு மொட்டினில் களித்தேன் குடித்தே
புவியுறு சந்தம் படித்தேன் - களித்தேன்..!
நலிவுறு பந்தம் நானிலம் எங்கும்
நனிவுற வேண்டி தனியொரு பயணம்

ஒளியுடன் கோர்த்த உணர்வுகள் குவித்து
இரவுடன் வார்த்த இனிமைகள் சுவைத்து
கனிவுடன் சேர்த்த கவிதைகள் விதைத்து
துணிவுடன் துவங்கிய பகலவன் பயணம்.
 

4 comments:

காயத்ரி வைத்தியநாதன் said...

இனிமைகள் சுவைத்து கனிவுடன் சேர்த்த கவிதைகள் விதைத்து தன் பாக்கடல் அலைகளால் இதயத்தை குளிர்விக்கும் கவிஞனின் வார்த்தை ஜாலங்கள் பிரமிக்கவைக்கிறது..! மார்கழி மாத அதிகாலை வேளையாய் குளிர்ச்சியூட்டுகிறது கவி படைத்த பா...:) தொடருங்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... அருமை...

வாழ்த்துக்கள்...

தமிழ்க்காதலன் said...

வாங்க தோழி, வணக்கம். உங்களின் கருத்துகள் நல்ல உற்சாகமூட்டுகின்றன. தொடருங்கள்.

தமிழ்க்காதலன் said...

வணக்கம் தோழர் திண்டுக்கல் தனபாலன், வாங்க. உங்களின் தொடர்ந்த பங்களிப்பு எம்மை மிகவும் ஊக்குவிக்கிறது. பாராட்டுக்கள். தொடருங்கள்.