Tuesday, September 13, 2011

"மலர்க்கொடி...!!"






நினைவில் நீங்கா உணர்வில் நீ
உணர்வில் கலந்த உறவும் நீ
இதயம் நுழைந்த இன்னுயிர் நீ
யாவுமாகி என்னுள் கலந்தாய் நீ


உன்னையும் என்னையும் இடம் மாற்றி
உள்ளத்தை உள்ளத்தால் உயிரூட்டி,- என்
உண்மைக்குள் உன்னையே சிறைப் பூட்டி
உறவென உறவான உன்னதம் நீ






இரண்டறக் கலந்த இன்பம் நீ
இதம் பதம் உணர்ந்த பின்புலம் நீ
இரவிலும் பகலிலும் என்பலம் நீ
இறவா இன்பத்தின் திறவுகோல் நீ


மல்லியும் முல்லையும் மலர்ந்தக் கொடி
மரகதம் பொன்னில் பொதிந்த தளிர்
மலரும் மருவும் இழைந்த சுகந்தம்
மனதால் மனதைப் புணர்ந்த சுகம்


குணத்தால் மனதைப் பிடித்து மயக்கும்
குவிந்தப் புன்னகை மிதக்கும் விழிகளில்
குவித்து குவிக்கும் கொவ்வை இதழ்களில்
குமிழென தளும்பும் உயிர்த் திமிரும்


மட்டிலாக் கவிதை கொட்டும் மலர்
மகரந்தம் சொட்டும் இதழ்த் தேன்
மடையில் பருகும் உயிர் உருகும்
மதுவில் ஊறிய மன்மதக் கலசம்


உடையில் நடையில் ஒளிரும் ஒய்யாரம்
ஊண் உறக்கம் தவிர்க்கும் சிங்காரம்
உறவில் கலந்த உன்னத சிருங்காரம்
உண்மையை பெண்மைக்குள் உணர்த்திய ஓங்காரம்


பெறாது பெற்ற பெருந் தவப்
பேற்றால் வரமாய் வளர்ந்த கற்பகம்
பேரன்பின் முகிழ்ப்பில் மூழ்கும் அஞ்சுகம்
பெற்றதில் பேரமைதிக் கொள்வாய்.

3 comments:

Kayathri said...

மணம் வீசும் மலர்....அருமை தோழரே...

பிரேமி said...

மலர்க்கொடி அழகாய்தான் படர்ந்திருக்கிறாள்..ம்... வாழ்த்துகள்..:-)

காயத்ரி வைத்தியநாதன் said...

இரண்டறக்கலந்து,இன்பம் தந்து இதம்பதம் உணர்ந்து பின்புலமாய் இருந்து, இரவிலும், பகலிலும் பலமாய் அமைந்து இறவா இன்பத்தின் திறவுகோலாய் விளங்கும் மலர்க்கொடியால் என்றென்றும் மகிழ்ச்சி மழை பொழியட்டும்..கவிஞன் மனதில்