Saturday, October 09, 2010

"அளவுக்கு மிஞ்சினால்....!" பாகம் - 2.


வளைந்து நெளிந்து வனப்பு காட்டும்
வாலைக்குமரி..! மிகுந்து கரை உடைக்கும்
காளி...! தளும்பும் என் தளிர்
நடை தாதுப் பொருள் இடமாற்றம்.

உயிர்த்துக் கிடக்கும் உயிர்க்கு உணவளிப்பேன்..!
உணவளிக்கும் பயிருக்கு உயிரளிப்பேன்...!
சலசலத்து ஓடும் நான்.... சற்றே
சீறிப்பாய நிலைமாறும் பயிர் தலைசாயும்.

பாலைப் புகும் வேளை சோலை
ஐந்து நிலம் சமைப்பதென் வேலை
புனலாகி அனல் அணைக்கும் பாஞ்சாலி
எதிர்பாராமல் வந்து போகும் விருந்தாளி.

எதிர்த்தவர் தலை சாய்க்கும் அருந்த...தீ..!!
இசைந்து கொடுக்க அசைந்து கொடுப்பேன்.
என்முன் எழுந்து நிற்க வேரறுப்பேன்..!!
என் தடம் மாற வாழ்க்கைத் தடுமாறும்.

அடங்கி கிடக்க ஆழி...! ஆர்ப்பரிக்க
ஆழிப்பேரலை சூழும் நிலவுலகம்
நில்லாது போகும் யான்முகம் சுழிக்க..!
காடும், மேடும், கலமும் காணாது போகும்.

துகள் மிகப் பனி..! துளிமிக மழை...!
மழை மிக நதி...!! நதி மிக காட்டாறு..!
பொங்கும் புனல் தங்கும் கடல்..!!
கடல் வியர்வை காற்றில் நீராவி..!!

என் உருவ மாற்றத்தில் உலகின்
பருவ மாற்றம் .....! எனக்கில்லை பருவம்.
காலம் கணிக்கும் கணினி....நான்.
ஞாலம் துய்க்கும் ஞானம் நான்.

நான் நீர்...!!
நீ....??.
***********************************

4 comments:

'பரிவை' சே.குமார் said...

இரண்டும் படித்தேன்.
அருமை நண்பா.

தமிழ்க்காதலன் said...

தோழர் குமாருக்கு நன்றி. தொடருங்கள்.

சுவடுகள் said...

சிலிர்க்க வைக்கும் சிந்தனை உங்களுக்கு. எப்படிப்பா...!! இயற்கையை அதிகம் நேசிக்கும் உங்கள் நேசம் பிடித்திருக்கிறது. எவ்வளவு அற்புதமாக யோசிக்கிறீர்கள். நிறைய அனுபவம் இருந்தால்தான் புரிந்துகொள்ள முடியும் உங்கள் எழுத்துக்கள். நல்ல அனுபவசாலியென உங்களை நினைக்கத் தோன்றுகிறது. இயற்கையின் பேராற்றலை நீங்கள் பார்க்கும் கோணம் வித்தியாசம். ம்ம்ம்... அசத்துங்கள். வாழ்த்துக்கள்.

# துகள் மிகப் பனி..! துளிமிக மழை...! மழை மிக நதி...!! நதி மிக காட்டாறு..!
பொங்கும் புனல் தங்கும் கடல்..!!
கடல் வியர்வை காற்றில் நீராவி..!!
அருமை. அற்புதம்.

# தளும்பும் என் தளிர்
நடை தாதுப் பொருள் இடமாற்றம்.
நவினத்துவ சிந்தனை.

# புனலாகி அனல் அணைக்கும் பாஞ்சாலி
எதிர்பாராமல் வந்து போகும் விருந்தாளி.
வித்தியாசமான உவமை.

# காலம் கணிக்கும் கணினி....நான்.
ஞாலம் துய்க்கும் ஞானம் நான்.
வாவ்...! தீர்க்க தரிசனம்.

மிக நன்றாக வந்திருக்கிறது கவிதை.

தமிழ்க்காதலன் said...

சுவடுகள் உங்களுக்கு என் வணக்கங்கள். இனிய கருத்துரை இட்டமைக்கு மிக்க நன்றியை தெரிவிக்கிறேன்.