Monday, August 30, 2010

கல்...!


என் கைத்தொழுத சிலை..!
கால் தடுக்கிய தடை...!
முட்டிச் சதைக்கிழித்து இரத்தம்
குடித்த ஆயுதம்...!!

குடிசை தாங்கும் முட்டுக்கால் தூண்,
சிறுதானியம் இடிக்கும் உறல்,
அறுசுவை அரைத்துத் தரும் அம்மி,
இளவட்டம் தூக்கும் வீரம்,
இரவில் மிரட்டும் ஐயனார்,

என் குரல் கேட்டு
என்னைப் போல் பேசும் எதிரொலி,
உன் மேல் பட்டு
கண் கூசச் செய்யும் கதிரொளி.

பூமித்தாயின் தகிப்பு,
வானவெளியின் முகப்பு,
நதியின் தாய்,
நிலமகளின் சேய்,
இயற்கை வனப்பின் இறுப்பு,
பூதங்களின் தொகுப்பு,
என் பாதங்களுக்கும்,
எரும்பின் பாதங்களுக்கும்...பிடிப்பு.

பூமியின் தேர்ப்படை,
உயிர்களின் வார்ப்படை,
குமரியின் உருவகம்.

உன்னை தொட்டால்...
பிரபஞ்சம் விரியும்..!,
பிரபஞ்சம் தொட்டால்...
உன்னில் முடியும்...!!

பெருத்து நின்றால்..."மலை"யாகி,
சிறுத்து நின்றால் "சிலை"யாகி,
கறுத்து நின்றாலும் "கலை"யாகிறாய்.
பனிப் போர்த்தி உறங்கும் பரமசிவன் - உன்னை,
"கல்" என்றார்கள். நான்
"கடவுள்" என்கிறேன்.

காணும் யாவிலும் நீ...
நான் வாழும் யாவிலும் நீ...
உனை உணராது போனெனே...!
இவ்வளவு காலம்...!!
"பிறப்பிற்கும், எவ்வுயிர்க்கும்" மூலம் நீ.
என் பிறப்பறுக்கும் வாளும் நீ.
கத்திக்கும் முன்னே கண்டெடுத்த ஆயுதம் நீ,
உன்(கற்)கால மனிதனின் முக்காலம் நீ,

என் முப்பாட்டிக்கும், பாட்டிக்கும் அடுப்பானாய்,
என் முன்னோரின் வாழ்க்கைக்கு துடுப்பானாய்,
உனை உணர்ந்து வாழ்ந்ததால் அது "கற்காலம்".
பூமியில் அதுவே "பொற்காலம்".

யோகியர்க்கும், ஞானியர்க்கும் வாழ்க்கை தந்தாய்.
எதுவெல்லாம் யோகம் என்று சொல்லித்தந்தாய்.
பாவலர் பாடும் பொருளும்.
காதலர் தேடும் சுகமுமானாய்.
இறைவன் உறையும் இடமும்,
இவர்கள் உறையும் தலமும் நீ.
மொத்தத்தில் அன்பின் அடையாளம்.
அன்பின் அடைக்கலம்.

குனிந்து செல்வோர் "குகை" என்றார்.
புரிந்து பணிந்து செல்வோர் "கோயில்" என்றார்.
புரியாதார்க்கு புதிர்....
புரிந்தார்க்கு புனிதம்.

மலைத்து நின்றார்க்கு "மலையானாய்".
மெய்மறந்து நின்றார்க்கு "மறையானாய்".
எல்லாமும் உனக்குள் கொண்டாய்,
எல்லாமாய் நீயே நின்றாய்.

நானறிந்த "கடவுள்"
சிலருக்கு மட்டும் "கல்".

No comments: