Saturday, August 28, 2010

"கள்ளி"...கள்!


முறுக்கி முறுக்கி...
முகம் காட்டுகிறாய்.

திருகித் திருகி...

தலை நீட்டுகிறாய்.

குறுங்கழுத்து உன் கழுத்து...அதில்

குறுக்கும் நெடுக்குமாய் சில எழுத்து.

பட்டகாயம் காட்டுகிறாய்...

பால் சிந்தி ஆற்றுகிறாய்.


உன் காயம் ஆறிய "வடுக்களாய்"

எங்கள்...

காதல் சின்னங்கள்.

நட்பின் பெயர்கள்.

இன்னும்... இன்னும்
ஆங்காங்கே
அன்பின் அடையாளமாய்,

உன் முதுகு, முகம் யாவும்
எங்கள் நகக் கீறல்கள்.

ஆயிரம் முட்கள் இருந்தும்...

அஹிம்சை காட்டும் நீ...

தாங்கமுடியா தருணங்களில் மட்டும்

இங்கொன்றும்... அங்கொன்றுமாய்...

முள் கொண்டு கீறினாய்.

புரிகிறது.

எங்களைப் போல் நீயும் ...

உன் அன்பை எங்கள் மேல் எழுதுகிறாய்.

கிறுக்கியே பழக்கப் பட்ட எங்களுக்கு...

உன் எழுத்துக்கள் "கீறலாய்த்தான்" தோன்றுகிறது.


நீயும் சரி, நாங்களும் சரி...
இரத்தம் சிந்தாமல் அன்பை சொல்ல முடியாதா?.

அன்பின் அடையாளம் இரத்தமா? அன்றி

இரத்தத்தின் அடையாளம் அன்பா?.

காவு கொடுத்தால்தான் காதல் பலிக்குமா?


நேசத்துக்குரிய நெஞ்சத்துக்கு தெரியும் முன்னே...

எங்கள் நேசம் பற்றிய இரகசியம்

நீ தெரிந்துகொள்வதால்தானோ
உன்னை..
"கள்ளி" என்கிறார்கள்.
காதலியைத் தீண்டும் இன்பம்...

கள்ளியே உனைத் தீண்டிய பின்புதான்...
பல
காளையர்க்கு கிடைக்கிறது.

வாட்டும் வறுமையிலும்,
சேர்த்துவைத்த செல்வத்தை செலவழித்து,...
ஈட்டும் பொருள் யாவும் யமக்கே தந்து...

படி..படியென்று...

படிப்படியாய் படிக்க வைத்தது....

படர்ந்த உன் மேனியில் எழுத
பயன்படுகிறது.

எங்களின் நியாயமான "ஆசைகள்"
உனக்கு "வன்முறையாகிறது".

புத்தன் சொன்னது புரிகிறது.

எங்களின்....
"ஆசையே உங்களின் துன்பத்திற்கு காரணம்".


இலைகளை முட்களாக்கி நீ மெய் கிழிக்கிறாய்...

இதழ்களில் வார்த்தை முட்களேந்தி...அவள்

இதயம் கிழிக்கிறாள்.

மென்மையில் நீயும், அவளும் ஒன்றுதான்.

மெத்தையில் அவள் உன்னைப் போலவும்,

உன்னை கீறும்போது நீ அவளைப் போலவும்,

உருமாற்றம் அடைகிறீர்கள்.


"தழைத் தின்னும் ஆடும்...
உன்
தண்டு தின்னும். ஏன் தெரியுமா?
தனியாதக் காதலால்"...!!!


தாவரங்களில் நீ தனித்துவம்.

இலை, பூ எதுவும் உதிர்ப்பதில்லை.

கால மாற்றத்தால் காய்வதில்லை.

இருக்கும் வரை பசுமையாய்...

இறக்கும் வரை இளமையாய்...

இருந்துவிட்டு போகிறாய்.
இறந்தாலும் இருக்கிறது முட்கள் உன்னுடனே.
இன்றும் இருக்கிறது அவள் நினைவு முட்கள் என்னுடனே..!!!
கள்ளியே...! உன்னிடம் ...
கன்னிகள்
கற்க வேண்டிய பாடம் இது.

வெட்டி நட்டால் வேலியாகிறாய்.

விட்டுவிட்டால் காலியாகிறாய்.
உன்னைத்
தொட்டுவிட்டால் காளியாகிறாய்..!
விளையும் பயிர்களுக்கு தாயாகிறாய்..!

வீழ்ந்துக் கிடக்கும் கொடிகளுக்கோ சேயாகிறாய்...!

இப்படி பல நேரங்களில் நீ பெண்ணாகிறாய்.


ஆட்டுக்கு உன் பால் அமுதமாகிறது.

ஆட்டுப் பால் எங்களுக்கு அமுதமாகிறது.

குழந்தைக்கு உன் பால் கொடிய விடம்...

குமரியோ உன் போல் கொடிய விடம்.


பருவங்கள் பகைக்காதவள் நீ.

குளிர்விடும் காலம் உன் துளிர்விடும் காலம்.
கோடையில்தான் உன் குடும்பம் குதூகளிக்கும்.

ஆடியில்தான் உனக்கு மக்களால்...

மகப்பேறு காலம்.


"வறுமையில் செம்மை" நீ...
வாழ்ந்துகாட்டுவது உண்மை.

தரிசானாலும் சரி, கரிசானாலும் சரி...

தழைத்தோங்குகிறாய்..!


பிறந்த வீடும், புகுந்த வீடும்

செழிக்கச் செய்கிறாய்.

களமும், கட்டுக் கதிர் நெல்லும்
உழவன்
குதிர் சேறும் வரை காவல் செய்கிறாய்.

எமக்காக இரவு பகல் ஏவல் செய்கிறாய்.

குலப் பெண்கள் உன் குணம் கற்று...

குடும்பம் செய்கிறார்கள்.


இவ்விதமாய்
இருவரும்
ஒன்றென்பதால்தான்...
உங்களை "கள்ளி" என்றார்களோ...?!
"அடிக் கள்ளி".

No comments: