Thursday, June 03, 2010

இனிய தமிழா ...!..?


இனிய நண்பா, வணக்கங்களுடன் இனிய நண்பன் தமிழ்க்காதலன், இப்பொழுதெல்லாம் இதமான பொழுதுகள் இனிமையாய் கழிகின்றனவா?!.. அன்றி கலக்கங்கலுடனும், மயக்கங்கலுடணும்தான் கழிகிறதா? மூச்சிமுட்டும் வேளையிலும் முயற்சி மட்டும் தொடர்கதையாய், நம்முடைய வாழ்வியல் நிகழ்தகவுகளில் எண்ணங்களுக்கு எதிரான தலைகீழ்மாறிலிகள். நல்ல எண்ணங்களை மட்டும் இதயத்தில் சுமந்து வாழ்க்கை பயணத்தை தொடர்வோம். கனவுகள் சுமந்த விழிகளும், காதல் சுமந்த மனமும் என்றைக்கு உறங்கி இருக்கிறது. இலட்சியங்கள் நோக்கி நடை போடும் கால்கலுக்குதான் எத்தனை எத்தனை பூட்டுகள்?. மனதின் வலி பொருக்கா உன் உணர்வுகள் இதழ் கடித்து இதழ் கடித்து ஈரக்கசிவாய் இரத்த துளிகள் உன் உதடுகளில் பார்த்திருக்கிறேன். நினைவுகளின் வலிமை நகம் கடிக்க தூண்டும் நிதர்சனம் கண்டிருக்கிறேன்.

நண்ப, உன்னோடு பேசும் போதுதான் தமிழ் தவழ்கிறது. நிறைய பேச வேண்டும். தாகமெடுத்த தமிழ் வேகமெடுக்கிறது. வாழ்வியலில் வளம் சேர்ப்பதிலேயே பொழுது கழிந்து விட்டால் தமிழின் நிலை என்ன? தமிழனின் நிலை என்ன? தாழ்ந்துபோன தமிழனால் வீழ்ந்து போன தமிழை எப்படி வலிமையும், இளமையும் கொடுத்து உயிர்ப்பிக்க போகிறோம்?. இளைத்துகிடக்கும் இந்த சமூகத்தை எப்படி எழுந்து நடக்கவைக்க போகிறோம்? நாளைய தலைமுறைக்கு தமிழ் இருக்குமா?...!! என்கிற நிலையில் இன்றைய தமிழகம் போய்க்கொண்டிருக்கிறது. மொழி என்பது கவிஞர்களுக்கும், புலவர்களுக்கும் மட்டுமே சொந்தமானதாக இருந்துவிட்டால், சராசரி மனிதனிடமிருந்து தள்ளி இருந்துவிட்டால், அந்த மொழி சமூகத்தில் தழைப்பது எப்படி?. வாழும் மனிதன் சாகும்வரை தமிழை உச்சரிக்காமல் போனால், அடுத்த தலைமுறைக்கு தமிழை தத்துகொடுப்பது யார்?. மிச்சம் விட்டு வைத்திருக்கும் தமிழும் தற்கொலைக்கு தூண்டப்படுகிற கேவலமான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இப்போதெல்லாம் தமிழ் என்பது சில சினிமா பாடல்களில் மட்டுமே வாழ்கிறது. பாட்டெழுதும் புலவர்களுக்கும், கவிஞர்களுக்கும் காசு கொடுப்பதால் தமிழ் அங்கே பிழைத்திருக்கிறது...( தழைத்திருக்கவில்லை). புதுக்கவிதை என்கிற பெயரில் பிறமொழி வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி, அடுத்து வரும் தலைமுறைக்கு அதுதான் தமிழ் என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கிவிடுகிறோம்.

7 கோடி பேர் வாழும் நாட்டில், 7 பேருக்கு மட்டும் தமிழ் தெரிந்தால், தமிழின் கதி என்ன?.

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தை" நினைவிருக்கிறதா நண்பா, நீயும் நானும் பள்ளியில் அனுதினமும் உச்சரித்த அமுதகானம். இன்று எத்தனை பள்ளிகளில் பாடப்படுகிறது?. சில அரசு பள்ளிகள் உட்பட பெரும்பான்மையான ஆங்கிலவழி கல்விச்சாலைகள் வரை இந்த பழக்கம் விட்டுப்போய் விட்டது நண்பா. உனக்கு தெரியுமா? தமிழை உச்சரித்தால் அபராதம் விதிக்கிற பள்ளிகள் தமிழ் நாட்டில் இருக்கின்றன. குழந்தைகளுக்கு தமிழ் "நல்ல பாம்பு விடமாகி விட்டது". தமிழன் காலில் கிடக்கும் செருப்பைவிட தமிழ் தாழ்ந்து கிடக்கிறது நண்பா.

பல பள்ளிகளில் இறைவணக்கம், கொடிப்பாடல், நாட்டுப்பண் போன்ற பாடல்களை ஒலிப்பெருக்கிகள் பாடிக்கொண்டிருக்க, நம் பிள்ளைகள் "உம்மனாம்மூஞ்சியாய்" உதட்டை இழுத்து மூடிக்கொண்டு நிற்கிறார்கள். தெரியாமலா சொன்னாள் ஒளவைப் பாட்டி,"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்று".

இறைவணக்க பாடல் என்பது "நீராரும் கடலுடுத்த" என்பது போய், மதம் சார்ந்த பாடல்களை பாடச்சொல்லி இறைவணக்கம் செய்கின்றன பல மதம் சார்ந்த பள்ளிகள். இதில் கொடுமை என்னவென்றால், நம்முடைய அரசாங்கப் பணத்தின் உதவியுடன் இவர்கள் தங்கள் மதத்தை இலவசமாய் பரப்பிக் கொள்வதுதான். இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு வகையில் "தேசத்துரோகம்" செய்கிறார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு "நாட்டுப்பற்றை" வளர்க்கவேண்டிய பொறுப்பு நம் பள்ளிகளுக்கு உண்டு. குழந்தைக்கு நாட்டைப் பற்றி சொல்லித்தராமல், மதம் வளர்த்தல் குற்றம்தானே.

தமிழகத்து தாய்மார்களை எகிப்திய "மம்மி"க்கள் பிடித்து ஆட்டுகின்றன. மம்மியும்,டாடியுமாய் உருமாறிவிட்ட தமிழகத்து திராவிடன் இப்போது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதிநிதியாகிவிட்டான். தமிழ்நாட்டில் மட்டும்தான் திரைத்துறையில்..... பல்மொழி பாடல்களும் இடம் பிடிக்கின்றன. ஆங்கிலம், இந்தி, அர்த்தமற்ற பாடல்களுக்கு.... மத்தியில், ஒன்றிரண்டு தமிழ்ப்பாடல்கள். ( நான் குறிப்பிடுவது பிறமொழி கலக்காத தமிழ்ப்பாடல்). ஒரு ஆங்கில படத்திலும் தமிழ்ப் பாடல் இடம்பெறவில்லை. உலகின் பல்வேறு மொழிகளில் தமிழ் சிறந்த மொழியாய் இருந்தும் பயனில்லை.

வானொலி (பண்பலை), தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் "தமிழ்ச்சேனல்" என பெயரை மட்டும் வைத்துக்கொண்டு ஒலிப்பரப்புகள் எல்லாம் ஆங்கிலத்தில். நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பேசும் பேச்சு சிலசமயம் இது எந்த மொழி என்கிற அளவுக்கு நம்மை யோசிக்க வைக்கின்றன.

தமிழுக்கு தமிழனிடத்தில் மதிப்பில்லை. அதனால் தமிழும், தமிழனும் வளரவில்லை. உயரவில்லை. தாய்மொழியை மதிக்காத தேசம் செழித்ததில்லை. தாய்மொழியை மதிக்காதவனை பிறநாட்டவர்கள் மதிப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் தாய்மொழியை, அவர்கள் மதிக்கிறார்கள்.

எண்ணிப்பார்க்கிறேன். பாட்டுக்கும், கூத்துக்கும்தான் தமிழ் பயன்படுமா? தமிழால் வேறு எதுவும் செய்ய முடியாதா? தமிழ் விஞ்ஞானம் பேசாதா? உலகின் மிகச்சிறந்த மெய்ஞானம் பேசிய தமிழ், இந்த விஞ்ஞானம் பேசாதா...?? பேசும். தமிழில் விஞ்ஞானம் இல்லையா?. இருக்கிறது. நம் மொழியை அறியாது, கற்காது, மூடர்களாய் போன நமக்கு அது தெரியாமல் இருக்கிறது.

மொழி எங்கே இளைக்கிறது???

தனி மனித வாழ்வியலில் இருந்து தள்ளி நிற்கிறபோது மொழி இளைக்கிறது. தனி மனிதனின் வாழ்க்கை " உழவும், நெசவும்" என்ற ரீதியில் இருந்தபோது அவனுக்கு உற்சாகம் தரத்தேவையான பொழுதுபோக்கு அம்சங்களான கதை, கவிதை, பாடல், இலக்கியம், நாடகம், நீதி என்ற அம்சங்களை மொழி கொண்டிருந்தது. அன்றைக்கு தேவையான விடயங்களை அன்றைய மனிதன் ஆக்கி வைத்தான். மன்னர்கள் காலம்வரை தமிழ் கற்றாரின் நிலையும், தமிழின் நிலையும் மிக நன்றாக உயர்ந்திருந்தது. ஆங்கிலேயர் காலத்துக்கு பிறகு .....அந்நிலை மாறிப்போனது. ஆங்கிலேயனுக்கு தமிழ் தெரியவில்லை. அவன் ங்கிலத்தை நமக்கு கற்றுக்கொடுத்து விட்டான்.

எப்படி???

அரசாங்க ரீதியான அலுவலக வேலைகள் அனைத்தும் ஆங்கில மொழியில் கையாளப்பட்டன. ஆங்கிலம் படித்தவர்களுக்கு வேலை என்று அறிவித்தார்கள். காசு பார்க்கும் ஆசை வந்த மனிதன் ஆங்கிலம் கற்றான். அடிமை வேலையைப் பெற்றான்.

விவசாயம் பொய்த்துப் போன காலங்களில் ஏற்பட்ட காயம், வலி, படித்தால் சுகப்படலாம் என யோசிக்கத் தூண்டியது. படிப்பு என்பது ஆங்கிலம் என்றானது. தமிழ் தாழ்ந்தது.

சுதந்திரத்திற்கு முன்பே .... நம்முடைய கவிஞானி " பாரதி" சொல்லிவிட்டார்."ஆலைகள் செய்வோம், கல்விச்சாலைகள் செய்வொம்" என்ற பாடலில் தெளிவான தீர்க்கமான முடிவு இதுதான் என்பதை பாரதி சொல்லிச் சென்று சுமார் 75 ஆண்டுகள் ஆகியும், நம்முடைய சமுதாயம் அதை செய்திருக்கிறதா? இல்லையே..!, செய்யவில்லையே..!!, திராவிட கழகங்கள் மாறிமாறி இம்மண்ணை தமிழைச் சொல்லி ஆண்டு கொண்டிருக்கிறது. அதேசமயம் தமிழ் மாண்டுக்கொண்டிருக்கிறது.

தமிழ் எங்கள் உயிர்மூச்சி என்பவர்கள்.....தமிழகத்து அலுவலகங்களில் .... தமிழ்மொழியை கட்டாயமாக்கவில்லை, ஏன்?. நம் வளர்ச்சிக்கு தேவையான விடயங்களை ஏன் இன்னமும் தமிழில் மொழிப்பெயர்க்கவில்லை. பொருளாதாரம், விஞ்ஞானம் இரண்டையும் மொழிபெயர்க்க எவ்வளவு காலம் ஆகும்? எவ்வளவு ரூபாய் ஆகும்?? கணக்கிட்டுப் பார்.

திராவிட இயக்கங்கள் தங்களின் மேடைப்பேச்சுக்களுக்கு செய்த செலவில் ஒரு பாதியை செலவழித்தாலே ...... இந்த சாதனையை நிகழ்த்தி இருக்க முடியும். ஏன் நிகழ்த்தவில்லை?.

அறிவு என்பது ஆங்கிலமல்ல. ஆங்கிலம் ஒரு மொழி. அவனவன் தாய்மொழியில்தான் செம்மையான அறிவை வளர்த்துக் கொள்ளமுடியும். நம்முடைய சமூகத்துக்கு ஆங்கிலம் என்பது மொழியாக கற்பிக்கப்படாமல் அறிவாக கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவு இன்று ஆங்கிலம் பேசுபவன் "அறிவாளி" எனத்தோற்றமளிக்கிறான். தமிழன் கை கட்டி, வாய் மூடி ஏமாளியாய் நிற்கிறான். வெள்ளைத்தோல் உள்ளவன் எல்லாம் அறிவாளி என எண்ணும் அளவுக்கு நம் சமூக மக்களுக்கு அறியாமை மண்டி கிடக்கிறது.

வந்தவன், போனவன் சொன்னதெல்லாம் கேட்டு வாழ்ந்த கூட்டமாகிப் போனதால்..... சுயம் தெரியாமல், தன் வலிமை அறியாமல், உருமாறி நிற்கிறோம். தமிழ் யானையை உலகம் ஆங்கிலம் எனும் அங்குசத்தால் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. யானைப் பாகனாய் நமது தலைவர்கள். தமிழ்ப் பாகன் கையில் ஆங்கில அங்குசம்.

அங்குசம் அகற்றினால் பாகனும், யானையும் உறுப்படும். தமிழர் வாழ்க்கை புலப்படும்.

"சிந்திப்போம், செயல்படுவோம்"

என்றும் பிரியங்களுடன்,

இனிய தோழன்,

தமிழ்க் காதலன்.

No comments: